வீட்டின் பூட்டை உடைத்து நகை, மடிக்கணினி திருடிய வழக்கில் ஒருவர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து நகை, மடிக்கணினி திருடிய வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 8:43 PM GMT)

அமைந்தகரையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, மடிக்கணினி திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

பெங்களூருவை சேர்ந்தவர் சசிகாந்த் ரெட்டி (வயது 32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சைலஜா ரெட்டி (27). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தையின்மைக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னை வந்த கணவன்-மனைவி இருவரும் அமைந்தகரை வெற்றி விநாயகர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர்.

கடந்த 9-ந் தேதி சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது 10 பவுன் தங்க நகை, மடிக்கணினி மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து நகை, மடிக்கணினியை திருடிச்சென்றது டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(எ) ஓலை சுரேஷ்(38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுரேசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் மீது அமைந்தகரை, டி.பி.சத்திரம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடித்த வழக்குகள் உள்ளது.

இவர் பலமுறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பின்பு போலீசார் சுரேஷை சிறையில் அடைத்தனர்.

Next Story