வருமானவரியில் விலக்கு அளிக்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


வருமானவரியில் விலக்கு அளிக்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 8:50 PM GMT)

வருமான வரியில் விலக்கு அளிக்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும், 1-6-2016 முதல் 30-9-2017 வரையிலான 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும், மாதாந்திர மருத்துவ படி ரூ.1000 வழங்கவேண்டும், காப்பீடு திட்ட மாதாந்திர சந்தாவை ரூ.350-ல் இருந்து ரூ.150 ஆக குறைக்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1½ லட்சம் வழங்கவேண்டும், ஈமச்சடங்கு நடத்திட முன்பணம் ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும், ஓய்வூதியர் உள்ளிட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சந்தான மூர்த்தி, துணைத்தலைவர் சிராஜுதீன், ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் ஆதிகுருசாமி ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட துணை தலைவர் துளசிராமன் நன்றி கூறினார்.

Next Story