மாற்றுத்திறனாளிகள் 114 பேருக்கு அடையாள அட்டைகள் - சிறப்பு முகாமில் வழங்கப்பட்டது


மாற்றுத்திறனாளிகள் 114 பேருக்கு அடையாள அட்டைகள் - சிறப்பு முகாமில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 13 Nov 2018 11:15 PM GMT (Updated: 13 Nov 2018 9:29 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் முகாமில் 114 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடக்கும். அதன்படி இந்த மாதம் முதல் செவ்வாய் தீபாவளி விடுமுறையாக இருந்ததால் 2-வது செவ்வாய்க்கிழமையான நேற்று முகாம் நடந்தது. முகாமிற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார்.

இளநிலை மறுவாழ்வு அலுவலர் மலர்விழி, பேச்சு பயிற்றுனர் நளினி, இயன்முறை மருத்துவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடையாள அட்டைகோரி விண்ணப்பித்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அவர்களை பல்வேறு சிகிச்சை பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஊனத்தின் தன்மை குறித்து டாக்டர்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில் 114 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு சலுகைகள் பெறலாம். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 86 ஆயிரம் பேர் இந்த அடையாள அட்டை பெற்றுள்ளனர். மனநலம் பாதிப்பு, தொழுநோய், சதை சிதைவு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்ட 6,262 பேருக்கு தலா ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது” என்றனர்.

மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், “தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஊனத்தின் குறைபாடு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் அடையாள அட்டை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுத்து ஊனத்தின் குறைபாட்டை அளவிடும் சதவீதத்தை குறைக்க வேண்டும்” என்றனர்.


Next Story