கழிவறைக்குள் பூட்டப்பட்ட மாணவி 2 மணி நேரம் தவிப்பு: பள்ளியும் பூட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


கழிவறைக்குள் பூட்டப்பட்ட மாணவி 2 மணி நேரம் தவிப்பு: பள்ளியும் பூட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:30 PM GMT (Updated: 13 Nov 2018 9:38 PM GMT)

மாணவியை உள்ளே வைத்து பூட்டிய நிலையில் பள்ளியும் பூட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கழிவறைக்கு சென்ற 1-ம் வகுப்பு மாணவியை உள்ளே வைத்து பூட்டிய நிலையில் பள்ளியும் பூட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி பசீராபாத் பகுதியில் நகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 270 மாணவிகள் படித்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த நதீம்பாட்ஷா மகள் ஷாஜிதா (வயது 5) 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். மற்றொரு மகள் அல்வியா 4-ம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் ஒன்றாகவே பள்ளிக்கு வந்து விட்டு வீடு திரும்புவர்.

இந்த பள்ளியில் வகுப்பறையையொட்டி கழிவறை உள்ளது. நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் மாணவி ஷாஜிதா கழிவறைக்கு சென்றாள். இந்த நிலையில் பள்ளி விடும் நேரம் நெருங்கியதையடுத்து சமையலறை, கழிவறை என ஆசிரியைகள் பூட்டி வந்தனர். மாணவி ஷாஜிதா கழிவறையில் இருந்ததை கவனிக்காமல் பொறுப்பற்ற முறையில் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டனர்.

இதனை தொடர்ந்து 4.10 மணியளவில் பள்ளி நேரம் முடிந்ததையடுத்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே செல்ல தொடங்கினர். இந்த நிலையில் ஷாஜிதாவை காணாததால் அவளது சகோதரியான 4-ம் வகுப்பு மாணவி அல்வியா அது குறித்து ஆசிரியைகளிடம் தெரிவித்தாள்.

ஆனால் ஆசிரியைகள் “உனது தங்கை வீட்டிற்கு சென்றிருப்பாள். அங்கு போய் பார்” என சத்தம்போட்டு அனுப்பி விட்டனர். இதன்பின் வீட்டிற்கு சென்றபோது அங்கு ஷாஜிதா வரவில்லை. இதனிடையே கழிவறை வெளியே பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே இருந்த மாணவி ஷாஜிதா கதறியவாறு அழுது கொண்டிருந்தாள். இந்த நிலையில் அல்வியாவை அழைத்துக்கொண்டு பெற்றோர், மாலை 5.15 மணியளவில் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஷாஜிதா கதறிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளி பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் ஆசிரியைகளிடம் தெரிவித்தனர். அதன்பின்தலைமைஆசிரியை ஷகினுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் உடனடியாக வந்து பள்ளியை திறந்து உள்ளே சென்று கழிவறையை திறந்தார். அப்போது ஷாஜிதா கதறியவாறு வெளியில் வந்தாள். அவளுக்கு ஆறுதல் கூறிய பெற்றோர் கழிவறையை பொறுப்பற்ற முறையில் வெளியே தாழ்ப்பாள் போட்ட ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களை திட்டி தீர்த்து விட்டு திரும்பினர். மாணவி கழிவறையில் இருந்ததை கவனிக்காமல் ஆசிரியைகள் பூட்டியது குறித்து அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளி தொடங்கியதும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். கழிவறையில் வைத்து மாணவி இருப்பதை கவனிக்காமல் பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் அங்கு வந்து தலைமைஆசிரியை ஷகின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவிக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதனையடுத்து தவறுக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story