அனுப்பர்பாளையம் பகுதியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது


அனுப்பர்பாளையம் பகுதியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

அனுப்பர்பாளையம் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ஜெயக்குமார், சங்கரநாராயணன், ராஜசேகர், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 பேர் டி.வி.யுடன் நடந்து வந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த சாமிபுரம் காலனியை சேர்ந்த செல்வம் என்கிற செல்வராஜ் (வயது 43) மற்றும் நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா அட்டபேடு காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (43) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் நெருப்பெரிச்சல், சேடர்பாளையம், பூலுவப்பட்டி பகுதிகளில் கோவில், ஓட்டல் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் டி.வி., ரகசிய கண்காணிப்பு கேமரா, வெள்ளிப்பொருட்களை திருடியது தெரியவந்தது.

5 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 2 பேரை கைது செய்தது மட்டுமின்றி, நகை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் பாராட்டினார்.


Next Story