கோவை அருகே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் மேலும் 2 கும்கிகள்


கோவை அருகே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் மேலும் 2 கும்கிகள்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:02 PM GMT (Updated: 13 Nov 2018 10:02 PM GMT)

கோவை அருகே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

துடியலூர்,

கோவை அடுத்த பொன்னூத்துமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இங்குள்ள காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி வன ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காட்டு யானைகளை விரட்ட முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. முதலில் ஜான், சேரன் ஆகிய 2 கும்கி யானைகள் மட்டுமே இங்கு கொண்டு வரப்பட்டன. கடந்த 11–ந் தேதி கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இந்த காட்டு யானைகள் அங்குள்ள வாழைகள் மற்றும் தென்னை மரங்களை நாசம் செய்து விட்டு சென்றன. இந்த சம்பவத்தால் விவசாயிகள் மட்டுமின்றி வனத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே காட்டு யானைகளை விரட்டும் பணிக்கு மேலும் 2 கும்கி யானைகளை வரவழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பொம்மன், சுஜய் ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று கோவை வந்தன. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

கோவை அடுத்த பொன்னூத்துமலை பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 4 கும்கி யானைகள் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக சேரன், ஜான் ஆகிய 2 கும்கி யானைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் பொம்மன் மற்றும் சுஜய் ஆகிய கும்கி யானைகளை கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இன்று (நேற்று) தான் இந்த 2 கும்கி யானைகளும் கோவை வந்தன. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 24 மணி நேரமும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள்.

மேலும் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்த தகவல் கிடைத்ததும், அங்கு கும்கி யானைகளுடன் சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் பொதுமக்களுக்கு காட்டு யானைகள் குறித்த தகவல் கிடைத்தால் அதுகுறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story