காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர்– முதுமலை எல்லையில் தொங்கும் மின்வேலிகள் அமைப்பு


காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர்– முதுமலை எல்லையில் தொங்கும் மின்வேலிகள் அமைப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 10:13 PM GMT (Updated: 13 Nov 2018 10:13 PM GMT)

காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர்– முதுமலை புலிகள் காப்பக எல்லையில் தொங்கும் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இக்காலக்கட்டங்களில் வனப்பகுதி பசுமையாக காணப்படும். இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவு ஊருக்குள் வருவது இல்லை. அதன்பின்னர் வரக்கூடிய காலக்கட்டங்களில் பனிப்பொலிவு மற்றும் கோடை காலம் தொடங்கி வனத்தில் உள்ள புற்கள் காய்ந்து விடுகிறது. மேலும் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.

இதனால் பசுந்தீவனத்தை தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. கூடலூர் நகராட்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இணையும் எல்லையில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இக்கரையோரம் குனில், புத்தூர்வயல், அள்ளூர்வயல், ஏச்சம்வயல், வடவயல் உள்பட பல கிராமங்கள் உள்ளது. இங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் நேந்திரன் வாழை, நெல், பீன்ஸ், தட்டைப்பயிறு உள்பட பல விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வனத்தில் போதிய தீவனம் கிடைக்காத காட்டு யானைகள் தொரப்பள்ளி, குனில், அள்ளூர்வயல், புத்தூர்வயல், வடவயல் உள்பட கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள குக்கிராமங்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தது. இதுதவிர இரவு 7 மணி ஆனதும் முதுமலை வனத்தில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறி தொரப்பள்ளி பஜாருக்குள் ஓடி வருவது தொடர் கதையாக இருந்தது. இதனால் இரவு நேரம் ஆனதும் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் பீதி அடைந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களையும் துரத்தியது. ஒரு கட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தாளாமல் முதுமலை கரையோர கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க எல்லையோரம் வனத்துறையினர் அகழிகள் தோண்டினர். மேலும் கும்கி யானைகள் கொண்டு கண்காணித்து காட்டு யானைகளை தடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

இருப்பினும் காட்டு யானைகளை தடுக்க முடிய வில்லை. மேலும் வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணித்தனர். ஆனால் எந்த பலனும் ஏற்பட வில்லை. நெல், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் தின்று வந்தது. நாளுக்குநாள் காட்டு யானைகளின் வருகையால் கிராம மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினரின் கோரிக்கைக்கு பிறகு கூடலூர்– முதுமலை புலிகள் காப்பக எல்லையோரம் அகழிகளுக்கு நடுவில் சூரிய சக்தி மின்வேலி அமைப்பதாக வனத்துறையினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர்– முதுமலை எல்லையோரம் அகழிகளுக்கு மத்தியில் தொங்கும் மின்வேலிகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தொரப்பள்ளி பகுதி மக்கள் கூறியதாவது:–

கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகள் வருகையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் இப்பகுதி மக்கள் ஏற்பட்டது. போராட்டத்தின் விளைவாக வனத்துறையினர் தொரப்பள்ளி முதல் போஸ்பாரா பகுதி வரை சுமார் 10 கி.மீட்டர் தூரத்துக்கு தொங்கும் மின்வேலி அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.

தற்போது தொரப்பள்ளி முதல் நெல்லிக்கரை வரை அகழி தோண்டி தொங்கும் மின்வேலி அமைத்துள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கும் மின்வேலி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும். இதனால் காட்டு யானைகள் வருகை இல்லை. இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


Next Story