பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் கண்ட தேவி கோவில் ஊருணி, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கோவில் ஊருணியில் பாசி படர்ந்து தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. ராமாயண காலத்தின் தொடர்புடைய சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீசொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் இங்கு உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் சுமார் 5 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பெரிய அளவிலான ஊருணி உள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் நிலையில் இந்த ஊருணி அமைந்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகள் வறண்டு காணப்படும் நிலையில், இந்த ஊருணி மட்டும் நீர் நிறைந்து காணப்படுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இந்த ஊருணிக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஊருணி எவ்வித பராமரிப்பும் இன்றி முழுவதும் பாசி படர்ந்தும், நாணல் புதர்கள் மண்டியும், ஊருணி கரையோரம் கருவேல மரங்கள் முளைத்தும், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த ஊருணியை தற்போது மக்கள் பயன்படுத்த முடியாமல் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:– ராமாயண கால வரலாற்றில் இருந்து கண்டதேவி மிகவும் புனிதமாக கருதப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊருணி கடந்த காலங்களில் மிகவும் பராமரிக்கப்பட்டு ஏழை மக்களுக்கு நீச்சல் குளம் போன்று விளங்கி வந்தது. இதையடுத்து கண்டதேவியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த ஊருணியை பயன்படுத்தி வந்தனர். ஏழை, ஏளிய மக்களுக்கு இந்த ஊருணி ஒரு நீச்சல் குளம் போல் விளங்கி வந்தது.
கடந்த சில மாதங்களாக இந்த ஊருணி முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுதவிர இந்த ஊருணியில் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்யப்படுகிறது. தற்போது இந்த ஊருணி பாசி படர்ந்தும், இதில் உள்ள மீன்கள் செத்து மிதந்தும் காணப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இது தவிர இரவு நேரங்களில் சில குடிமகன்கள் இந்த ஊருணி கரையோரம் மது அருந்தி விட்டு அதன் காலிபாட்டில்களை ஆங்காங்கே போட்டு விட்டு செல்கின்றனர். எனவே சிறப்பு மிக்க இந்த ஊருணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பு செய்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.