கஜா புயல் எச்சரிக்கை; பாம்பன், ராமேசுவரம் மீனவர்களை அதிகாரிகள் நேரில் சந்தித்து அறிவுரை
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன், ராமேசுவரம் பகுதி மீனவர்களை மீன்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து அறிவுரை வழங்கினர்.
ராமேசுவரம்,
பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று வானிலை மைய அறிவித்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதியில் சுமார் 1000 நாட்டுப்படகுகளும், 900 விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று 3–வது நாளாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்த புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் நேற்று பாம்பன் பகுதியில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, புயல் கரையை கடக்கும் நேரத்தில் சூறாவளி காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படும். சுமார் 1 மீட்டருக்கும் மேலாக கடல் நீர்மட்டம் உயரும் என்று கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து படகுகளை அருகருகே நிறுத்தாமல் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்த வைக்க வேண்டும். படகில் உள்ள உபகரணங்களை பத்திரமாக இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். தேவையான அத்தியாவசிய பொருட்களை அனைவரும் கையிருப்பில் வைத்திருக்கவேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று எச்சரித்தார். மேலும் மீனவர்கள் தங்களது உறவினர்கள் யாராவது மீன்பிடிக்க சென்றிருந்தால் அவர்களை உடனடியாக கரை திரும்ப கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதேபோல ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் ராமேசுவரம் பகுதி மீனவர்களை அழைத்து அறிவுரை கூறினார்.
வழக்கத்தை காட்டிலும் பாம்பன் கடல் பகுதி அமைதியாக உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து தேவதாஸ் என்பருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பிரவீன், லேனஸ், ஜார்ஜ், பாலா உள்பட 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சூரை மீன் வாங்குவதற்காக அவர்கள் பாம்பன் வந்தனர். ஆனால் 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் இல்லை. இதையடுத்து அவர்கள் மீண்டும் தூத்துக்குடி செல்ல முயன்றபோது அவர்களை புயல் எச்சரிக்கையை காரணம்காட்டி மீன்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் பாம்பனிலேயே தங்கியுள்ளனர்.
நேற்று மதியம் பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டு மண்டபம் கடலோர காவல்படை ரோந்து கப்பல் தென்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.