காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது
காரியாபட்டி அருகே கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது65). விவசாயி. மாந்தோப்பு கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக காட்டுப் பகுதியில் இவருடைய வீடு உள்ளது. சம்பவத்தன்று வீரபத்திரன் வீட்டிற்கு வெளியே உடல் கருகிய நிலையில் கிடந்ததை பார்த்தவர்கள் மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மல்லாங்கிணறு போலீசார் வீரபத்திரனின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீரபத்திரனை அவரது மனைவி மகாலட்சுமி கொலை செய்திருப்பது தெரியவந்தது. தாயாரின் வீட்டில் இருந்த அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரபத்திரன் வேலைக்கும் செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார்.
இதனால் இரவு வீரபத்திரன் தூங்கிக்கொண்டிருந்த போது கணவரை கொலை செய்ய திட்டமிட்டு கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார். இதில் வீரபத்திரன் இறந்து விட்டார்.
பின்னர் வீரபத்திரன் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறிவிடலாம் என்று உடல் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு உடலை வீட்டுக்கு வெளியே இழுத்துக் போட்டு விட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மல்லாங்கிணறு போலீசார் மகாலட்சுமியை கைது செய்தனர்.