சாத்தூர் தொகுதியில் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் பாடம் புகட்டுவோம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்


சாத்தூர் தொகுதியில் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் பாடம் புகட்டுவோம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்
x
தினத்தந்தி 14 Nov 2018 5:30 AM IST (Updated: 14 Nov 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் தொகுதியில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்டுவோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சாத்தூர்,

சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சாத்தூரில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:–

விருதுநகர் மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டையாகும். எம்.ஜி.ஆர். காலத்தில் தமிழகம் முழுவதும் கழகம் வெற்றிவாய்ப்பை இழந்தபோது வெற்றி பெற்ற 2 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று சிவகாசியாகும். அதே போல 2006– ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தபோது நமது மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 3–ஐ கழகமும், அதன் கூட்டணியும் கைப்பற்றியது.

இன்றைக்கு நமது கட்சியை அழிக்க எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துள்ளனர். அவர்களுக்கு சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில்பாடம் புகட்டுவோம். இவ்வாறு பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:–

கடந்த 2011–ம் ஆண்டு தேர்தலில் என்னை சாத்தூர் தொகுதிக்கு வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்த போது எனக்கு இருக்கன்குடி மாரியம்மனைத் தவிர வேறு எவரையும் இத்தொகுதிக்குள் தெரியாது. ஆனால் அம்மாவின் வேட்பாளர் என்ற ஒரே தகுதியுடன் போட்டியிட்ட என்னை உங்கள் வீட்டுப்பிள்ளையாக தத்து எடுத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள்.

கழகத் தொண்டர்களை பொறுத்தவரை இயக்கத்தைத்தான் தங்கள் உயிரினும் மேலாக நேசிப்பார்கள். தனிப்பட்ட ஆளுமைகளின் பின்னே உண்மைத் தொண்டர்கள் அணி திரள மாட்டார்கள். சாதியின் பெயரால் அ.தி.மு.க. தொண்டர்களை எவராலும் ஏமாற்ற முடியாது. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டுச் செல்லும் எவரையும் அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. இந்தத் தொகுதியில் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் தொண்டர்கள் தக்க பாடத்தைபுகட்டி அவர்களை விரட்டி அடிப்பது நிச்சயம். இவ்வாறு பேசினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ராதாகிருஷ்ணன் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், சாத்தூர் நகர செயலாளர் என்.எஸ்.வாசன், வெம்பக்கோட்டை ராமராஜ், எதிர்கோட்டை மணிகண்டன், சாத்தூர் சண்முகக்கனி, வக்கீல் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சேதுராமானுஜம், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story