மணல் கடத்தலுக்கு உடந்தை: போலீஸ் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எங்கள் ஊரை சுற்றிலும் காவிரி ஆறு ஓடுகிறது. தோட்டக்குறிச்சி பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் இரவு முழுவதும் மாட்டுவண்டி, டிராக்டர்கள் மூலம் மணல் திருட்டு நடக்கிறது. சட்டவிரோதமாக அள்ளப்படும் மணலை புகழூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருப்பு வைக்கிறார்கள். அங்கிருந்து லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர். இந்த சட்டவிரோத செயலுக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைக்கிறார்கள். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மணல் திருட்டை தடுக்கவும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் மணல் திருட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கரூர் கலெக்டர் அன்பழகன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் நடந்த விசாரணையின்போது, தோட்டக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய வீடியோ காட்சி நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் இருந்துள்ளார். எனவே அவரும், சட்டவிரோத மணலை இருப்பு வைத்த சுப்பிரமணியனும் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் குருநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணை முடிவில், மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதனை கரூர் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. இடமாற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல சட்டவிரோதமாக மணலை இருப்பு வைத்ததற்காக சுப்பிரமணியனை, அவர் பணியாற்றும் தமிழ்நாடு காகித நிறுவனம் சார்பில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருகிற 20–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.