வீடு புகுந்து நகை பறிக்க முயற்சி; வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் வீட்டிற்குள் புகுந்து நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை முத்துலிங்கம்பேட்டை காமராஜ் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்திரா (வயது 45). முருகன் காய்கறிகடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகலில் அவர் கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இந்திரா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வீட்டிற்கு 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் என்று இந்திராவிடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களை வீட்டிற்குள் வர இந்திரா அனுமதித்து உள்ளார். அவர்கள் வீட்டிற்குள் வந்து திருமண பத்திரிகை எடுப்பதுபோல் பாசாங்கு செய்துள்ளனர். அப்போது திடீரென ஒருவர் இந்திராவின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா அவரது பிடியில் இருந்து விடுபட்டு சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த நபர்கள் இந்திராவை விட்டுவிட்டு தப்பியோடினார்கள். அதில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு திப்புசுல்தான் வீதியை சேர்ந்த அப்துல் இமாத் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை லாஸ்பேட்டை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் தப்பியோடியது கணேஷ் மற்றும் இளம்பெண் ஒருவர் என்றும் தெரிகிறது. அந்த பெண் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடிவருகிறார்.