கழுகுமலையில் கந்தசஷ்டி திருவிழா: கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கழுகுமலை,
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் கழுகாசலமூர்த்தி சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5-ம் நாளான நேற்று முன்தினம் தாரகாசூரனை சுவாமி வதம் செய்தார்.
விழாவின் சிகர நாளான நேற்று மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலசந்தி, திருவனந்தல் பூஜை நடந்தது. காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி பல்லக்கிலும், வள்ளி-தெய்வானை அம்பாள்கள் பூஞ்சப்பரத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சூரசம்ஹாரம்
மதியம் பக்தர்கள் பால்குடம் எடுத்து, மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் சண்முகர் அர்ச்சனை வழிபாடு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் கோவில் தெற்கு வாசல் பந்தலில் சுவாமி வீரவேல் ஏந்தி, வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சூரசம்ஹாரம் நடந்தது.
முதலில் பானுகோபனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் யானைமுகன், சிங்கமுகன், தர்மகோபன் ஆகியோரை அடுத்தடுத்து சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் மாயையாக வந்த சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் சுவாமி வைத்து கொண்டார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை மறுநாள், திருக்கல்யாணம்
7-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று, தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 8-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூஞ்சப்பரத்திலும் வீதி உலா வந்து, தபசு மண்டபத்தில் எழுந்தருளி, தபசு காட்சி நடக்கிறது.
9-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 10-ம் நாளான 17-ந்தேதி (சனிக்கிழமை) இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பெரிய பல்லக்கிலும், சோமஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, வீதி உலா சென்று, பட்டின பிரவேசம் நடைபெறும்.
11-ம் நாளான 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீசுவரன் தலைமையில், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
கோவில்பட்டி
மேலும், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவின் சிகர நாளான நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. காலையில் சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் கோவில் பின்புறம் உள்ள மைதானத்தில் சுவாமி எழுந்தருளி வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்தார். கஜமுகன், சிங்கமுகனாக அடுத்தடுத்து உருமாறிய சூரபத்மனையும் சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கயத்தாறு
இதேபோன்று கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவில், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் கோவில், ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் கைலாசநாத சுவாமி கோவில், கருங்குளம் குலசேகரநாயகி சமேத மார்த்தாண்ட ஈசுவரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story