திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் 23–ந் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 23–ந் தேதி 2 ஆயிரத்து 668 அடி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை காண தமிழ்நாடு, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கொடியேற்றத்தை காண அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவிய தொடங்கினர். விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தங்க கொடிமரத்தில் காலை 5.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் குவிந்திருந்த திரளான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து காலை 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரத்தின் முன்பு இருந்து வீதி உலா நடைபெற்றது. வெள்ளி விமானத்தில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், கண்ணாடி விமானங்களில் விநாயகர், பராசக்தி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இரவில் பஞ்சமூர்த்திகள் முஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி, ஹம்சம், சிம்ம வாகனங்களில் வீதிஉலா வந்தனர். சாமி வீதியுலாவின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் வெவ்வேறு வாகனங்களில் நடக்கிறது.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி ரதம் வருகிற 19–ந் தேதி இரவு நடக்கிறது. அன்று காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது. 20–ந் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.
முதலில் விநாயகர் தேரும், அடுத்து முருகர் தேரும் இழுக்கப்படுகிறது. தொடர்ந்து பெரியதேர் இழுக்கப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் நின்று தேர் இழுப்பார்கள். பெரிய தேர்நிலைக்கு வந்ததும், இரவில் அம்மன் தேர் இழுக்கப்படும். அந்த தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். அதைத்தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 23–ந் தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வனரோஜா எம்.பி., கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம், திருவண்ணாமலை நகர கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆறுமுகம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.