விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தான் உள்ளது என்பதை தி.மு.க. தான் அறிவிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி


விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தான் உள்ளது என்பதை தி.மு.க. தான் அறிவிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 14 Nov 2018 11:00 PM GMT (Updated: 14 Nov 2018 2:14 PM GMT)

‘விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தான் உள்ளது’ என்பதை தி.மு.க. தான் அறிவிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

வேலூர், 

திருச்சியில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் மாநாடு குறித்த மாவட்ட செயல் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் வேலூரை அடுத்த பொய்கையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இது ராஜபக்சேவுக்கும், சிறிசேனாவுக்கும் மிகப்பெரிய தோல்வி, தலைகுனிவு. அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை வளைக்கலாம் என்ற எதேச்சதிகார போக்கிற்கு உரிய நேரத்தில் ஜனநாயகம் பாடம் புகட்டும் என்பதற்கு இது சான்று. தன்னுடைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று அதிபர் சிறிசேனா பதவி விலகுவது தான் சரியாக இருக்கும்.

பா.ஜ.க. ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல் சாதுர்யமாக பதில் கூறி உள்ளார் ரஜினிகாந்த். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என சொல்லுவார்கள். அப்படி என்றால் படையை விட பாம்பு வலிமையானது என்பது பொருள் அல்ல. படையே நடுங்கும் அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது, ஆபத்தானது என்பது பொருள். ஆகவே 10 பேர் சேர்ந்து பாம்பை அடிப்பதால் பாம்பு பலசாலி ஆகி விடாது. இப்படி தான் பா.ஜ.க.வை பார்க்கிறோம். பா.ஜ.க.வின் பலத்தை வைத்து நாங்கள் எதிர்க்கவில்லை, அவர்களின் குணத்தை வைத்து எதிர்க்கிறோம்.

பா.ஜ.க. கொள்கை, கோட்பாடு ரீதியாக இந்திய தேசத்திற்கு, இந்திய மக்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளன. தி.மு.க.வுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியை அதிகார பூர்வமாக அறிவிக்கக்கூடிய பொறுப்பு தி.மு.க.விற்கு தான் உண்டு. தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாக தான் இருந்து வருகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் பிரதமர் மோடி சர்வாதிகார போக்காக நடந்து கொண்டார். வரும் நாடாளுமன்ற

பொது தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரூர் அருகே சிட்லிங் மலை பகுதியில் மலைவாழ் சமூகத்தை சார்ந்த 16 வயது சிறுமி மிகக்கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பாத காவல்துறை அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வழக்கில் கைதாகும் குற்றவாளிகளை

எக்காரணத்தை கொண்டும் ஜாமீனில் வெளியே விடக்கூடாது. அவர்களை சிறையில் வைத்தே விசாரிக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அண்மையில் முதல்–அமைச்சரை சந்தித்து நினைவூட்டினோம். 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு மாற்று கருத்து இல்லை. இனி கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும் என முதல்– அமைச்சர் கூறினார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் தான் 7 பேரை விடுவிக்க மாட்டார்கள் என்ற விமர்சனம் இருந்தது. இன்றைக்கு காங்கிரசுக்கு நேர் எதிராக உள்ள பா.ஜ.க.வும் அதே நிலையை மேற்கொள்கிறது. 7 பேரை விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கவர்னர் தயக்கம் காட்டுவது, அது கவர்னரின் தயக்கம் அல்ல, மோடியின் தயக்கம், மத்திய அரசின் தயக்கம். ஆகவே 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்–அமைச்சர் கவர்னரை சந்தித்து பேச வேண்டும்.

துணை வேந்தர் நியமனம் செய்வதில் வேண்டும் என்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது நீண்ட காலமாக இருந்து வருகிற நடைமுறையாக இருக்கிறது. கவர்னர் துணை வேந்தர் நியமனத்தில் தொடர்ந்து தலித்களை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்?. 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறோம். அவர் விவரம் அறியாதவர் அல்ல. அப்படி அவரை குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story