நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பயங்கரம்: இரும்பு கரண்டியால் குத்தி வாலிபர் கொடூரக்கொலை நண்பர் கைது


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பயங்கரம்: இரும்பு கரண்டியால் குத்தி வாலிபர் கொடூரக்கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2018 3:30 AM IST (Updated: 14 Nov 2018 7:19 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இரும்பு கரண்டியால் குத்தி வாலிபரை கொடூரமாக கொலை செய்ததாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இரும்பு கரண்டியால் குத்தி வாலிபரை கொடூரமாக கொலை செய்ததாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் பிணம்

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள பிள்ளையார்கோவில் அருகே ஒரு கடை வாசலில் ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நேற்று அதிகாலை 4–30 மணிக்கு பஸ் ஏற வந்த பயணிகள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், நெல்லை மாநகர உதவி போலீஸ் கமி‌ஷனர் கிருஷ்ணசாமி, நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

குத்திக்கொலை

அப்போது அவர் ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. மேலும், கொலையானவர் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கொட்டாரத்தை சேர்ந்த வாசுதேவன் என்பவருடைய மகன் வினோத் என்ற சீவலப்பேரியான் (வயது 35) என்பதும், அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்து சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.

முதலில் பழக்கடையில் வேலை பார்த்து வந்த அவர் அதன்பிறகு ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். பின்னர் சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வருகின்ற பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்தல் மற்றும் அங்கு பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களிடம் பணம் பறித்தல் உள்ளிட்ட செயல்களில் வினோத் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் பிக்பாக்கெட், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும் சமீபத்தில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டவர்களிடம் திருடிய வழக்கும் இவர் மீது உள்ளது.

ஒருவர் சிக்கினார்

வினோத் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு மோப்ப நாய் புருட்டோ வரவழைக்கப்பட்டது. அது மதுரை ரோட்டில் சிறிது தூரம் சென்றுவிட்டு மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்தது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். வினோத்தை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் போலீசாரிடம் ஒருவர் சிக்கினார்.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 51) என்பது தெரியவந்தது.

இரும்பு கரண்டியால்...

விசாரணையில் அவர் போலீசாரிடம் தெரிவித்த பரபரப்பு தகவல் வருமாறு:–

முருகனும், வினோத்தும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் சுற்றித்திரிந்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருவரும் ஒன்றாக மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வினோத் முதலில் முருகனை அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், அங்குள்ள ஒரு கடையில் இருந்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை எடுத்து வந்து அதன் பின்பகுதியால் வினோத்தின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேல்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரும்பு கரண்டியால் குத்தி வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story