ஜோலார்பேட்டை அருகே கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாததால் விரக்தி
ஜோலார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாததால் விரக்தி அடைந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் குள்ளகிழவன் வட்டத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). இவர் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூரில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். மேலும் கடந்த ஒரு ஆண்டாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார்.
இவரிடம் ஜோலார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் தீபாவளி சீட்டு கட்டி வந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி முடிந்ததும் கட்டிய பணத்தை திருப்பி தராததால், 15–க்கும் மேற்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். அவர்களிடம் நாளை தருகிறேன், நாளை மறுநாள் தருகிறேன் என குமரேசன் காலம் கடத்தி வந்தார்.
அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாக குமரேசன் தெரிவித்தார்.
இந்த நிலையில் தீபாவளி சீட்டு பணத்தை திருப்பி தர முடியாததால் விரக்தி அடைந்த குமரேசன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி சீட்டு நடத்தி பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் குமரேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.