மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அரியலூரில் நாளையும், பெரம்பலூரில் வருகிற 19-ந்தேதியும் நடக்கிறது.

அரியலூர், 

2018-19-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரியலூர் மாவட்ட அள விலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதே போல் பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. தடகள போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டிகளும் நடைபெற உள்ளது.

பார்வையற்றோர் பிரிவில் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதல் போட்டிகளும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், நின்ற நிலை தாண்டுதல், பந்து எறிதல் போட்டிகளும், தனித்தனியாக நடைபெற உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவில் புத்தி சுவாதினம் முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீட்டர் ஓட்டம், பந்து எறிதல் போட்டிகளும் நடத்தப்படுகிறது.

புத்திசுவாதினம் நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், மூளை நரம்பு பாதிப்பு (செரிபரல் பராலிசிஸ்) உள்ளோருக்கு நின்ற நிலையில் தாண்டுதல் போட்டிகளும், நடைபெற உள்ளது. காது கேளாதோர் பிரிவில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகளும் நடைபெற உள்ளது.

குழு விளையாட்டு போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து, மேஜைப்பந்து ஆகிய போட்டிகள் நடக்கிறது. பார்வையற்றோர்கள் பிரிவில் அடாப்டட் வாலிபால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் எறிபந்து, காது கேளாதோர் பிரிவில் கபடி போட்டியும் நடக்கிறது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

இந்த தகவல் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story