பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது முத்தரசன் பேட்டி
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று முத்தரசன் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் பதற்றத்தோடு உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான். அவர்கள் கூறிய வாக்குறுதிகள் ஒன்றுகூட இதுவரை நிறைவேற்றவில்லை. சுதந்திரமாக செயல்படக்கூடிய சி.பி.ஐ. வருமான வரித்துறை தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மத்திய அரசின் தலையீட்டால் பல்வேறு முரண்பாடுகள் அதில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, மதசார்பற்ற கட்சிகள், நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு 2019-ம் ஆண்டு தேர்தலுக்காக ஒன்றுகூடி வருகிறோம். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது கடுகளவும் சாத்தியமில்லை. பாலியல் வன்முறைகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அரசு எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. போலீஸ் துறையே அதற்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
இயற்கை சீற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். ஆனால் கஜா புயலுக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கூறினாலும் அவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு நேரம் காலம் அவகாசம் இல்லை. ரஜினிகாந்த் நல்ல நடிகர், ஆனால் அவர் அரசியல்வாதி கிடையாது. 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தனது வஞ்சத்தைத் தீர்த்து கொள்கிறது. மாநில அரசும் அவர்களின் விடுதலைக்கு அக்கறை காட்டவில்லை. இலங்கையில் தொடர்ந்து ஜனநாயக படுகொலை நடந்து வருகிறது. தமிழர்களுக்கு அங்கு ஒருபோதும் பாதுகாப்பு கிடையாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறது. உடனடியாக மத்திய அரசு மவுனத்தை கலைய வேண்டும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story