செல்போன் பேச்சால் விபரீதம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் படுகொலை கள்ளக்காதலன் போலீசில் சரண்


செல்போன் பேச்சால் விபரீதம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் படுகொலை கள்ளக்காதலன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:30 PM GMT (Updated: 14 Nov 2018 6:51 PM GMT)

செல்போன் பேச்சால் ஏற்பட்ட விபரீதத்தால், அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண்ணை படுகொலை செய்த கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.

சோமரசம்பேட்டை, 

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட சுண்ணாம்புக்காரன்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகன் நடராஜன்(வயது31). கட்டிட தொழிலாளியான இவர், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள அழகானம்பட்டியை சேர்ந்தவர் சோழராஜன். இவரது மனைவி நீலா(30). இத்தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சோழராஜன் இறந்து விட்டார். அதன் பின்னர் அழகானம்பட்டியில் மகனுடன் வசித்து வந்த நீலா, வயிற்று பிழைப்பிற்காக கட்டிட பணியில் சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது நடராஜன்-நீலா இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி நீலா வீட்டிற்கு நடராஜன் சென்று உல்லாசம் அனுபவிப்பதை வழக்கமாக கொண்டார்.

இந்த நிலையில் நீலா, அடிக்கடி தனது செல்போன் மூலம் வேறு நபர்களிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த நடராஜன் அவரை கண்டித்தார். ஆனாலும், நீலா அதை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீலா வற்புறுத்தி வந்துள்ளார்.

அப்போது அவர், உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், வேறுநபர்களுடன் செல்போனில் பேசக்கூடாது என நடராஜன் எச்சரித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடராஜன் சுண்ணாம்புக்காரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு நீலாவை அழைத்து வந்து இரவில் இருவரும் ஒன்றாகவே படுத்து தூங்கினர். நள்ளிரவில் நீலாவுக்கு செல்போன் அழைப்புவரவே, அதை எடுத்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்த நடராஜன்,அவருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த நடராஜன் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை(குழவிக்கல்)எடுத்து நீலா தலையில் போட்டார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. சிறிது நேரத்திலேயே நீலா பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவு வேளையில் என்ன செய்வதென்று தெரியாமல் கொலையுண்ட நீலா உடல் அருகிலேயே விடிய, விடிய கனத்த இதயத்துடன் நடராஜன் அமர்ந்திருந்தார்.

நேற்று அதிகாலை நடராஜனின் தாயார் வீட்டிற்கு வந்தார். அங்கு ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு, பிணத்தின் அருகே மகன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய நடராஜன், நேராக சோமரசம்பேட்டை போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்திடம் நடந்த சம்பவத்தை கூறியதுடன், நீலாவை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கொலை நடந்த வீட்டிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சென்றனர்.

அங்கு அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்த நீலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நீலாவின் சொந்த ஊரான அழகானம்பட்டியில் உள்ள உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சோமரசம்பேட்டை அருகே சுண்ணாம்புக்காரன்பட்டியில் கள்ளக்காதலியின் செல்போன் பேச்சால் அவரை, கட்டிட தொழிலாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Next Story