திருச்சி மாவட்டத்தில் 47 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் விரைவில் வினியோகம் அதிகாரி தகவல்


திருச்சி மாவட்டத்தில் 47 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் விரைவில் வினியோகம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:00 PM GMT (Updated: 14 Nov 2018 6:57 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் 47 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் விரைவில் வினியோகிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருச்சி, 

பள்ளிக்கல்வி துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்படவில்லை. இதனால் இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 மாணவர்களுக்கு வழங்கப்படும் போது கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்தவர்களுக்கும் (தற்போது பிளஸ்-2 பயில்பவர்கள்) விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.


திருச்சி மாவட்டத்திற்குரிய விலையில்லா சைக்கிள்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்த மாணவ-மாணவிகள் 24 ஆயிரத்து 137 பேருக்கும், இந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பு படிக்கும் 23 ஆயிரத்து 64 பேருக்கும் என மொத்தம் 47 ஆயிரத்து 201 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளது. சைக்கிள் தயாரிப்பு ஒப்பந்த நிறுவனம் அந்தந்த பள்ளிகளுக்கு சைக்கிள்களை நேரடியாக வழங்கி வருகிறது. இந்த விலையில்லா சைக்கிள்கள் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது” என்றார்.


Next Story