டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நாகையில் தூய்மைப்பணி கலெக்டர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நாகையில் தூய்மைப்பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Nov 2018 4:15 AM IST (Updated: 15 Nov 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகை நகராட்சி, நீலா தெற்கு வீதி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரி்ல் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொசுக்கள் மூலம் பரவும் நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். நோய் பற்றிய விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும். தங்கள் வீடுகளை சுற்றி தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் மற்றும் உடைந்த மண்பாண்டங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தினசரி வீட்டில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட வேண்டும். வீட்டு உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் குடிநீர் பானைகளை நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடவும், மருத்துவமனை மற்றும் அலுவலக வளாகங்களை தூய்மையாக பராமரிக்குமாறும் அறிவுரை வழங்கினார்.

பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் துண்டு பிரசுரங்கள் வழங்கவும், வீடு, வீடாக சென்று காய்ச்சல் தடுப்பு பற்றி எடுத்து கூறவும் களப்பணி யாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story