திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரம் தொழிலை மேம்படுத்த வங்கி கடன் வழங்க கோரிக்கை


திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரம் தொழிலை மேம்படுத்த வங்கி கடன் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2018 11:00 PM GMT (Updated: 14 Nov 2018 7:23 PM GMT)

திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்கள், தொழிலை மேம்படுத்த வங்கி கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர், 

பண்டிகை காலங்களில் அனைத்து வீடுகளிலும் முதலிடம் பிடிப்பது அகல் விளக்குகள் தான். அகல் விளக்குகளை ஏற்றி பண்டிகைகளை கொண்டாடும்போது புது உற்சாகம் பிறக்கிறது. காலங்கள் மாறினாலும் களி மண்ணால் ஆன அகல் விளக்குகளுக்கு என்றுமே தனி இடம் உண்டு. கோவில்களில் அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கார்த்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவாரூர் கிடாரங்கொண்டான் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக வயல், குளங் களில் இருந்து எடுக்கப்படும் களிமண்ணுடன், ஆற்று மணலை சேர்த்து 2 நாட்கள் ஊற வைத்து, அதன் பின்னர் அகல் விளக்குகள் பல்வேறு விதமான வடிவங்களில்தயாரிக்கப்படுகிறது. இந்த விளக்குகள் ஒவ்வொன்றும் அழகிய வடிவங்களில் உள்ளன.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் குணசேகரன், கூறியதாவது:-

வயல், குளங்களில் இருந்து களி மண் எடுத்து, மணலுடன் சேர்த்து பக்குவமான நிலையில் அகல் விளக்கு தயாராகிறது. இந்த விளக்குகள் வெயிலில் காய வைக்கப்பட்டு, உரிய வெப்ப நிலையில் முறையாக சூடுபடுத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக 3 மாதங்கள் உழைக்கிறோம். ஒரு நாளைக்கு 500 அகல் விளக்குகளை தயார் செய்யலாம்.

இந்த ஆண்டு 50 ஆயிரம் விளக்குகளை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். பெரும்பாலும் “கை திருவையை” பயன் படுத்தி மண்பாண்ட பொருட் களை தயாரித்து வருகிறோம்.

வங்கி கடன் வசதியோ, மானியமோ எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. மானியத்துடன் வங்கி கடன் வழங்கினால் மின் மோட்டாருடன் கூடிய திருவையை பயன்படுத்தி மண்பாண்ட தொழிலை மேம்படுத்த முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story