பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத் பேச்சு


பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2018 3:45 AM IST (Updated: 15 Nov 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதற்கு சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மேற்கு மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு திட்டம் மூலம் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. தேர்தலின் போது 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் 2 லட்சம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை.

காங்கிரஸ் கட்சியை கிராமம், வட்டாரம், நகரம், பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் வரும் காலத்தில் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும். சரியான முறையில் கட்சி பணியில் ஈடுபடாத நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு கலந்து கொண்டு பேசும் போது, ‘கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார்? வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்கள் வெற்றிக்கு பாடுபட்டு, ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வல்லுனர் பிரிவு தலைவர் ரங்கராஜன் மோகன்குமாரமங்கலம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story