தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது


தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 11:45 PM GMT (Updated: 14 Nov 2018 7:55 PM GMT)

தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அண்ணியை கொன்று உடலை சாக்குமூடையில் கட்டி வீசியதாக வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் பகுதியில் உள்ள உப்பாறு பாலத்திற்கு கீழ் கடந்த மாதம் 25–ந் தேதி சாக்குமூடையில் பிணம் இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த சாக்குமூடையில் இருந்த உடலை வெளியில் எடுத்தபோது அது பெண்ணின் உடல் என்றும், அந்த பெண்ணுக்கு 40 வயது இருக்கலாம் என்றும், அந்த பெண் கொலை செய்யப்பட்டு 4 அல்லது 5 நாட்கள் இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மர்ம ஆசாமிகள் அந்த பெண்ணை வேறு பகுதியில் கொலை செய்து உடலை சாக்குமூடையில் கட்டிய பின்னர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உப்பாற்றுக்குள் வீசிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் அணிந்து இருந்த தங்கத்தாலியை வைத்து அவர் திருமணமானவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தங்கத்தாலி, கம்மல், வளையல் மற்றும் சேலை ஆகியவற்றை கொண்டு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சமீபத்தில் பெண்கள் யாராவது காணாமல் போனதாக புகார் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்தனர். மேலும் அந்த பெண் அணிந்து இருந்த தாலி, வளையல், சேலை மற்றும் கையில் முருகன் என்று பச்சை குத்திஇருந்த புகைப்படம் ஆகியவற்றை துண்டு பிரசுரமாக வெளியிட்டனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்றும், அவரை கொலை செய்த குற்றவாளிகள் யார் என்றும் தேடி வந்தனர்.

தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடிபுதூரை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (வயது 45) என தெரியவந்தது. இவரை கொலை செய்ததாக அவருடைய சகோதரி கணவனான வேலுச்சாமி (43) மற்றும் குமரேசன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட வேலுச்சாமி போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கவுந்தப்பாடிபுதூர் ஆகும். கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வரும் நான் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளேன். இதனால் தினமும் கவுந்தப்பாடிபுதூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள ஆயக்குடிக்கு சென்று அங்கு கொய்யா பழங்களை மொத்தமாக வாங்கி வந்து, விற்பனை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி வசந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். எனது வீட்டிலேயே எனது மனைவியின் அக்காள் முத்துலட்சுமி, அவருடைய கணவர் முருகன் மற்றும் அவர்களுடைய 2 மகள்கள் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களது 2 குடும்பமும் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சாலையோரம் கொய்யாப்பழம் வியாபாரம் செய்கிறோம்.

கூட்டுக்குடும்பமாக வசித்துவருவதால் எனக்கும், முத்துலட்சுமிக்கும் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையில் முத்துலட்சுமியின் முதல் மகளுக்கு ஏற்கனவே திருமணாகி விட்ட நிலையில், 2 –வது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு பிறகு முத்துலட்சுமி என்னுடன் உள்ள உறவை துண்டித்துக்கொள்ள முடிவு செய்தார். இதனால் எனக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

முத்துலட்சுமிக்கு என்னை பிடிக்காமல்போனதால் வேறுயாருடனோ கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு என்னை வெறுக்கிறாள் என நினைத்தேன். இதனால் அவள்மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 20–ந்தேதி நானும், எனது தங்கையின் மகன் குமரேசன் என்கிற தினகரன் (24) என்பவருடன் மினிவேனில் ஈரோடு சென்றோம். அங்கு கொய்யாப்பழம் விற்றுக்கொண்டிருந்த முத்துலட்சுமியை வா ஊருக்கு போகலாம் என்று வலுக்கட்டாயமாக அழைத்து அவளை வேனில் ஏற்றிக்கொண்டு கவுந்தப்பாடிபுதூர் சென்றேன். வேனை குமரேசன் ஓட்டினார்.

வேனில் பின்னால் நானும், முத்துலட்சுமியும் அமர்ந்து இருந்தோம். அப்போது எனக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், துண்டால் முத்துலட்சுமியின் கழுத்தை இறுக்கினேன். அதில் அவள் இறந்துபோனாள். இதனால் அதிர்ச்சியடைந்த நான், இந்த கொலை விவகாரம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கொய்யாப்பழம் வாங்க ஆயக்குடிக்கு செல்லும் போது தாராபுரம் உப்பாற்றில் போட்டு விடலாம் என்று நானும், குமரேசனும் முடிவு செய்தோம்.

அதற்காக முத்துலட்சுமியின் உடலை பெரிய சாக்குமூடையில் கட்டி, அதை வேனுக்குள் வைத்து, அந்த சாக்குமூடை மீது காலியாக இருந்த பழக்கூடைகளை அடுக்கி வைத்துவிட்டோம். பின்னர் அன்று இரவு வழக்கம்போல் கொய்யா பழங்கள் வாங்க, ஆயக்குடி செல்வதாக அனைவரிடம் கூறிவிட்டு, நாங்கள் இருவரும் வேனை எடுத்துக்கொண்டு ஆயக்குடி சென்றோம். பின்னர் திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாறு பாலம் வந்ததும், வேனில் மூடையாக கட்டி வைத்து இருந்த உடலை எடுத்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் வீசிவிட்டு சென்று விட்டோம்.

பின்னர் ஆயக்குடியில் வழக்கம்போல் கொய்யாப்பழம் வாங்கி விட்டு, கவுந்தப்பாடிபுதூருக்கு சென்று விட்டோம். இந்த நிலையில்தான் தாராபுரம் போலீசார் முத்துலட்சுமி அணிந்து இருந்த தங்கத்தாலி, கம்மல், வளையல், சேலை மற்றும் கையில் முருகன் என்று பச்சை குத்தியிருந்த புகைப்படங்களை துண்டு பிரசுரமாக அச்சடித்து அனைத்து இடங்களிலும் வெளியிட்டு இருந்தனர். அதை பார்த்த முத்துலட்சுமியின் உறவினர் ஒருவர், முத்துலட்சுமி காணாமல் போய்விட்டது குறித்து போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் எங்களை விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் போலீசார் எங்கள் இருவரையும் கைது செய்தனர்.

இவ்வாறு வேலுச்சாமி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைடுத்து போலீசார், இவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


Next Story