குன்னூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஊர்வலம்


குன்னூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:00 AM IST (Updated: 15 Nov 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.

குன்னூர்,

மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊழியர்களுக்கு சம்பள மாற்றம், நிறுவனத்தில் 4ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று குன்னூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர். இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். செயலாளர் ஜேக்கப் மோரிஸ், அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் கணேசன், வெங்கடாசலபதி, என்.எப்.டி.இ. சங்க மாவட்ட செயலாளர் ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமானது சிம்ஸ் பூங்காவில் இருந்து தொடங்கி கிரேஸ் ஹில், பெட்போர்ட்டு சர்க்கிள் வழியாக மீண்டும் சிம்ஸ் பூங்காவுக்கு சென்று அங்குள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் நிறைவடைந்தது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

கடந்த 2007–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2017–ம் ஆண்டு சம்பள மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தாமதப்படுத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் மத்திய மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பள மாற்றம் கொண்டு வரவும், 4ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story