பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க ஊட்டி மலைரெயிலில் தூய்மை பணி


பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க ஊட்டி மலைரெயிலில் தூய்மை பணி
x
தினத்தந்தி 15 Nov 2018 3:45 AM IST (Updated: 15 Nov 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க ஊட்டி மலைரெயிலில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம் ஊட்டி ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. அப்போது பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ரெயில் நிலையத்தில் மலை ரெயிலில் பயணிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அமர்ந்து இருக்கும் மரத்தால் ஆன இருக்கைகள் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் வந்தது. அந்த மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் அடிக்கடி கை வைக்கும் இருக்கைகளின் மேல்பகுதி, ஏறும் பகுதி, பெட்டிகள் மற்றும் ஜன்னல்கள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் ரெயிலின் வெளிப்பகுதியில் கிருமி நாசினி கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஒரு லிட்டர் கிருமி நாசினிக்கு 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, அரசு பஸ்களில் தூய்மை பணி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், பாலாடா, தும்மனட்டி, கல்லட்டி, நெலாக்கோட்டை, அரவேனு, கேத்தி, அய்யன்கொல்லி, மசினகுடி போன்ற பகுதிகளில் 36 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 760 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போடப்பட்டு உள்ளது.

நீலகிரி முழுவதும் 17 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 3 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story