நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார்: மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம்


நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார்: மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:00 AM IST (Updated: 15 Nov 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தொடர்பாக, மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம் அளித்தார்.

பெங்களூரு,

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதிஹரிகரன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். பின்னர் அவர், பாலியல் தொல்லை தொடர்பான வீடியோ ஆதாரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்’ என்ற படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படம் கன்னடத்தில் ‘விஸ்மய’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடித்தபோது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று சுருதி ஹரிகரன் ‘மீ டூ’ இயக்கம் மூலம் புகார் தெரிவித்தார்.

இதை மறுத்த நடிகர் அர்ஜூன், ரூ.5 கோடி கேட்டு சுருதி ஹரிகரன் மீது மானநஷ்ட வழக்கை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். மேலும் நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீதும், அர்ஜூன் கொடுத்த புகாரின் பேரில் சுருதி ஹரிகரன் மீதும் கப்பன் பார்க் போலீசில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இருவரும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் மாநில மகளிர் ஆணையம் தாமாக இந்த வழக்கை கையில் எடுத்து, விசாரணை நடத்தி வருகிறது. நடிகை சுருதி ஹரிகரன் மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நடிகர் அர்ஜூன் மீது நான் கூறியுள்ள பாலியல் புகாருக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. வீடியோ ஆதாரமும் உள்ளது. அதை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன். அதனால் அந்த ஆதாரத்தை பகிரங்கப்படுத்த முடியாது” என்றார்.

மகளிர் ஆணையத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, நடிகை சுருதி ஹரிகரன், தான் சர்க்கரையை போன்றவர். அதனால் என்னை பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊடகங்கள் அவரை பின்தொடர்ந்து வருவதை வைத்து இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறியதாக சொல்லப்படுகிறது.


Next Story