கர்நாடகத்தில் வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு 17-ந் தேதி வருகை - மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தகவல்


கர்நாடகத்தில் வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு 17-ந் தேதி வருகை - மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:30 AM IST (Updated: 15 Nov 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு வருகிற 17-ந் தேதி வருவதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெங்களூருவில் நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து மத்திய உள்துறை மந்திரியை நேரில் சந்தித்து, வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். நிவாரண பணிகளுக்கு ரூ.2,434 கோடி வழங்குமாறு கேட்டோம்.

வறட்சியால் ரூ.16 ஆயிரத்து 662 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பேரில் வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு வருகிற 17-ந் தேதி கர்நாடகம் வருகிறது. 10 அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சென்று வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார்கள்.

அதிகாரி கவுதம் தலைைமயிலான முதல் குழு, 17-ந் தேதி யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களிலும், 2-வது நாள் அதாவது 18-ந் தேதி பல்லாரி மற்றும் தாவணகெரே ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு பணியை மேற்கொள்கிறது.

அதே போல் உயர் அதிகாரி டாக்டர் மகேஷ் தலைமையில் 2-வது குழு, தார்வார், பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கதக் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வறட்சியை ஆய்வு செய்கிறது.

அதிகாரி மானஸ் சவுத்திரி தலைமையிலான 3-வது குழு, கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களிலும் வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மத்திய குழு அதிகாரிகள் வருகை தரும்போது, அவர்களுக்கு வறட்சி பாதித்த அம்சங்கள் குறித்து விவரங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story