இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்


இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:30 PM GMT (Updated: 14 Nov 2018 11:05 PM GMT)

இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழ் கலாசார முறையில் காரைக்குடி வாலிபர் திருமணம் செய்துகொண்டார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி, விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன்(வயது 32). இவர் டிப்ளமோ படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்து வந்த இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த பெர்லிஸ்(30) என்ற பெண் அறிமுகமானார். இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களின் நட்பு பின்னர் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுகுறித்து இருவரின் பெற்றோரிடம் பேசி இருவீட்டாரின் சம்மதத்தை பெற்றனர். மேலும் பெர்லிஸ், தமிழ்நாட்டு பழக்கவழக்கம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்ய விரும்பினார். இதன்படி பள்ளத்தூரில் பெரியோர்கள் முன்னிலையில் இந்துமத சம்பிரதாயம், இந்திய கலாசாரப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த மணமகள் பெர்லிஸ் பட்டுப்புடவை அணிந்திருந்தார். மணமகன் கார்த்திகேயன் பட்டு வேட்டி அணிந்திருந்தார். மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு பெற்றோர்களிடம் ஆசி பெற்றனர். இதுகுறித்து மணமகள் பெர்லிஸ் கூறியதாவது:–

இந்தியாவை சேர்ந்த மணமகனை திருமணம் செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய திருமண வாழ்க்கை முறை மற்றும் தமிழக பாரம்பரிய கலாசார முறைகள் எனக்கு மிகவும் பிடித்ததால் அதன்படி திருமணம் செய்ய கார்த்திகேயனிடம் கேட்டேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டதால் எங்கள் திருமணம் நடைபெற்றது. எனது பெற்றோர்களுக்கு விசா பிரச்சினையால் அவர்கள் இந்தியாவிற்கு வரமுடிய வில்லை. அதனால் மணமக்கள் நாங்கள் இருவரும் இந்தோனேஷியாவிற்கு சென்று அவர்களிடம் ஆசி வாங்க உள்ளோம். தமிழர்களையும், தமிழ் கலாசாரத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கிறது. மனதிற்கு பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த மணமகனாக தேர்வு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் தமிழ்நாட்டு மருமகள் என்பது மிகவும் பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story