டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து வழக்கு: மதுரை கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து வழக்கு: மதுரை கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Nov 2018 11:15 PM GMT (Updated: 14 Nov 2018 11:05 PM GMT)

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை பனையூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை தெற்கு வெளிவீதி முக்கியமான பகுதியாகும். இது மீனாட்சி அம்மன் அஷ்டமி சப்பரத்தில் செல்லும் முக்கிய பாதையாகவும் விளங்குகிறது. தெற்குவெளி வீதி–ராமச்சந்திரபுரம் சந்திப்பில் டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடுகின்றனர். குறிப்பாக மாணவர்கள், பெண்கள் அதிக அளவில் இந்தப்பகுதியில் செல்வார்கள். இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ள இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன் கோவில், மகப்பேறு மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், காய்கறி மார்க்கெட், பஸ்நிறுத்தம், ஆரம்பப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அங்கு டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல அழகர்கோவில் மெயின்ரோடு, எஸ்.கொடிக்குளம் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று ஆழ்வார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இது குறித்து மதுரை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story