திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு கடன் உதவி - கலெக்டர் தகவல்


திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு கடன் உதவி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:51 PM GMT (Updated: 14 Nov 2018 11:51 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களுக்கு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பல்வேறு திட்டங்களில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் பயன்பெற, விண்ணப்பதாரர்கள் முஸ்லிம், கிறிஸ்தவம், புத்தம், சீக்கியம், பார்சி, ஜெயின் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

கிராம பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரம், நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். அதன்படி 5 திட்டங்களின் கீழ் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது.

தனிநபர் கடன் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறும் திட்டத்தில், ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் வாங்கினால் ஆண்டுக்கு 5 சதவீதமும், அதற்கு மேல் வாங்கினால் 6 சதவீதமும் வட்டி விதிக்கப்படும். இந்த கடனை 5 ஆண்டுகளில் கட்ட வேண்டும். ரூ.30 லட்சம் வரை கடன் பெறும் திட்டத்தில், ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதமும் வட்டி விதிக்கப்படும். இதற்கு ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

கறவை மாடு கடன் திட்டத்தில் ஒரு மாடு வாங்க ரூ.25 ஆயிரமும், கலப்பின முர்ரா எருமை ஒன்று வாங்க ரூ.35 ஆயிரமும் வழங்கப்படும். ஆட்டோ வாங்க, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும். சுயஉதவிக்குழு கடன் திட்டத்தில் பயனாளி, சிறுபான்மை சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

அந்த குழுவில் குறைந்தது 6 மாதம் சேமிப்பு, கடன் அளித்தல் உள்ளிட்டவற்றில் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். இதில் அதிகபட்ச கடனாக ரூ.1 லட்சத்துக்கு, 7 சதவீத வட்டி விதிக்கப்படும். 3 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற ஆண்களுக்கு 10 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமும் வட்டி விதிக்கப்படும்.

இந்த கடன் திட்டங்களுக்கு சாதி, வருமானம், பிறப்பு சான்றிதழ், விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கிக்கு தேவையான ஆவணங்கள், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி கடனில், சேர்க்கை கட்டணம், புத்தகம், எழுதுபொருள், மற்ற உபகரணங்கள், தேர்வுக்கட்டணம், விடுதி, உணவு கட்டணம் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறத்தினருக்கு ரூ.98 ஆயிரம், நகர்ப்புறத்தினருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.

குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி கல்விக்கு ரூ.3 லட்சம் வரையும், தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையும், முதுகலை தொழிற்கல்வி, தொழிற்நுட்ப கல்விக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம், வெளிநாடுகளில் தொழிற்கல்வி, தொழிற்நுட்ப கல்வி படிக்க ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரையும் 3 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேல், ரூ.6 லட்சம் வரை இருப்பவர்களுக்கு இதே திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும்.

கல்விக்கடனுக்கு ஆதார் அட்டை, சாதி, மாற்றுச்சான்று, வருமானம், இருப்பிடம், உண்மை, மதிப்பெண், வங்கிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மத்திய நகர கூட்டுறவு வங்கி கிளை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆகியோரை அணுகலாம்.

இந்த தகவலை கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.


Next Story