அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை - நாராயணசாமி வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர வேண்டும். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களையே சாரும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா அரியாங்குப்பத்தில் உள்ள ஏ.வி.ஆர்.கே. மகாலில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு வரவேற்றார். எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, வளர்ச்சி ஆணையர் மற்றும் கல்வித்துறை செயலர் அன்பரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:–
புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் பெற வித்தாக இருந்தவர் நேரு. நமது மாநிலத்தின் மீது நேருவுக்கு நிறைய அக்கறை இருந்தது. அதனால் தான் ஜிப்மர் ஆராய்ச்சி மையம் இங்கு வந்தது. புதுச்சேரிக்கும், நேருவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிறிய மாநிலமாக இருந்தாலும், கல்விக்கு அதிக கவனம் செலுத்துகிறோம். பட்ஜெட்டில் கல்விக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக கல்வித்துறையில் பல மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது நம்முடைய பிள்ளைகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.
அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் கொள்கை. அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.
நூற்றுக்கு நூறு கல்வி அறிவு பெற்ற மாநிலம் புதுச்சேரி. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை, பல்மருத்துவம், செவிலியர் கல்லூரிகள் என்று புதுச்சேரி மாநிலத்தில் பல கல்லூரிகளை திறந்து குறைந்த கட்டணத்தில் கல்வி கொடுக்கிறோம்.. நேர்முக தேர்வு செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கடந்த ரூ.1.50 கோடி செலவு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது 1850 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளோம். புதுச்சேரி மாநிலம் கல்வியில் முதன்மையான மாநிலமாக வர முனைந்து செயல்பட்டு வருகிறோம்,
இவ்வாறு அவர் பேசினார்.