ஆரணி அருகே சிவன் கோவிலில் ஐம்பொன் சிலைகள், கோபுர கலசங்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஆரணி அருகே சிவன் கோவிலில் பூட்டை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள், கோபுர கலசங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி,
ஆரணி அருகே வெள்ளேரி கிராமத்தில் ஏரிக்கரை அருகே பழமை வாய்ந்த குங்குமநாயகி உடனுறை சோமநாதீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
கடந்த 2009–ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது உபயதாரர்களால் வழங்கப்பட்ட நின்ற கோலத்தில் ஆன 2½ அடி உயரமுள்ள பிரதோஷ சிவன், பார்வதி ஐம்பொன் சிலைகள் வழங்கப்பட்டது. இந்த சிலைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பிரதோஷ காலங்களில் அபிஷேகம், வழிபாடு நடைபெறும்.
இந்த கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில், பொன்னியம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்களின் சிலைகளும் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு ஒருமுறை பூஜை செய்வதால் சிவன், பார்வதி சிலைகள் மட்டும் சோமநாதீஸ்வரர் கோவிலிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பூசாரி உலகநாதன் கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் மர்ம கும்பல் கோவில் கதவின் பூட்டை கடப்பாரையால் உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற மர்ம நபர்கள் மூலவர் சன்னதியில் இருந்த 2½ அடி உயரமுள்ள சிவன், பார்வதி ஐம்பொன் சிலைகள், அம்மன் தாலி, சிவன் வெள்ளிப்பட்டை, 3 கோபுர கலசங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
நேற்று காலை பூசாரி உலகநாதன் கோவிலை திறக்க வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு போன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் ஆய்வாளர் ரவிகணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்து துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது. தற்போது சாமி சிலைகள், கோபுர கலசங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐம்பொன் சிலைகள், கோபுர கலசங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story