தூய்மையான பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு போட்டி: வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


தூய்மையான பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு போட்டி: வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 15 Nov 2018 9:36 PM IST)
t-max-icont-min-icon

தூய்மையான பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஆசியா மரியம் பரிசு வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் பள்ளி கல்வித்துறையின் மூலம் “தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி திட்டம்“ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் நற்சான்றிதழ் வழங்கினார்.

இதேபோல் பரளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எலச்சிபாளையம், கொழிஞ்சிப்பட்டி, ஆர்.புதுப்பட்டி ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், வலையப்பட்டி மற்றும் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகள் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இந்த பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ரூ.10 ஆயிரம் காசோலையும், நற்சான்றிதழும் வழங்கினார். மேலும் சுகாதாரம் சார்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் 39 பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம் காசோலையும், நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் “தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story