சேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு
சேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலம் தாதுபாய்குட்டையில் உள்ள பழைய மோட்டார் வாகன உதிரி பாகங்கள் பிரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், சிவதாபுரம் அருகே பனங்காடு என்ற பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக வந்த புகாரை தொடர்ந்து சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கோட்டீஸ்வரி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது பழைய மோட்டார் வாகன உதிரி பாகங்கள் பிரித்து எடுக்கும் பணியில் 2 குழந்தை தொழிலாளர்களும், கோழி இறைச்சி கடையில் ஒரு குழந்தை தொழிலாளரும் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தை தொழிலாளர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு சேலம் குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக குழந்தை தொழிலாளர் சட்டம் 1986-ன் படி வயது சான்றின் அடிப் படையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த ஆய்வில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஜெயகுமார், தாமோதரன், உதவி ஆய்வாளர்கள் ரங்கசாமி, ஞானசேகரன், சீனிவாசன், சிவகுமார், சாந்தி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட களப்பணியாளர் யுவராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையாளர் கோட்டீஸ்வரி கூறும் போது, ‘அபாயகரமான தொழில்களில் 18 வயதுக்கும், இதர தொழில்களில் 14 வயதுக்கும் உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது சட்ட விரோதமாகும். மீறி பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால் வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்டவிதிகளை மீறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 2-வது முறையாக சட்டவிதிகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story