சேலம் தாலுகா அலுவலகங்களில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


சேலம் தாலுகா அலுவலகங்களில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2018 3:30 AM IST (Updated: 15 Nov 2018 9:59 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நேற்று கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சூரமங்கலம், 

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பொங்கல் போனஸ், நாள் கணக்கில் கணக்கிட்டு வழங்க வேண்டும், ஜமாபந்தி படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில், சங்கத்தின் தாலுகா கிளை செயலாளர் தனபால் தலைமையில் கிராம உதவியாளர்கள் பலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல் சேலம் மணியனூரில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்தில் வட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகத்தில் வட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும் போது, ‘7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(நேற்று) தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். இதையடுத்து செயற்குழு தீர்மானத்தின்படி அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர்.

Next Story