‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்கள் ரத்து மேலும் 5 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
‘கஜா’ புயல் காரணமாக விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் 5 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
விழுப்புரம்,
வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் காரணமாக நேற்று கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக நேற்று ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 5.55 மணி, மதியம் 2.30 மணி, மாலை 5.45 மணிக்கு இயக்கப்பட வேண்டிய 3 பயணிகள் ரெயில்களும், மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு காலை 9 மணி, மாலை 6.45 மணி, இரவு 9 மணிக்கு வர வேண்டிய பயணிகள் ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை மார்க்கமாக திருச்செந்தூருக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், இதே மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மார்க்கமாகவும், அதுபோல் மதுரை- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், திருநெல்வேலி- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கத்திலும் இயக்கப்பட்டன. மேலும் ‘கஜா’ புயல் காரணமாக சென்னை- காரைக்கால் இடையே இயக்கப்படும் கம்பன் எக்ஸ்பிரஸ், சென்னை- மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், சென்னை- தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.
Related Tags :
Next Story