சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை ரூ.3½ லட்சம் சிக்கியது
சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடிய,விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
சங்ககிரி,
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும், லஞ்சம் அதிகளவில் புரள்வதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று சென்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கதவை பூட்டி விட்டு, வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து, வாகன ஆய்வாளர்கள் தனபால், விஸ்வநாதன் மற்றும் பணியாளர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த தனியார் வாகன ஓட்டுனர் பயிற்சி நிறுவன பணியாளர்கள், இடைத்தரகர்கள் பலரையும் மடக்கி பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த சோதனை நேற்று காலை 5 மணி வரை விடியவிடிய நீடித்தது. அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறுகிறதா? என அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உள்பட அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story