சி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரர் கைது


சி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2018 11:30 PM GMT (Updated: 15 Nov 2018 6:16 PM GMT)

சி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சர்தார் மகன் ஜமீர் (வயது 27). இவர் பி.இ. மெக்கானிக்கல் படித்து முடித்துள்ளார். இவருக்கு கடந்த 2016-ல் மூணாறு பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜீவ்கிருஷ்ணன் (35) என்பவர் அறிமுகமானார்.

அப்போது ராஜீவ்கிருஷ்ணன், தான் பெரம்பலூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசாக பணியாற்றி வருவதாகவும், தனக்கு தெரிந்த சிலருக்கு ஏற்கனவே சி.பி.ஐ.யில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், எனவே உங்களுக்கும் சி.பி.ஐ.யில் வேலை வாங்கித்தருவதாக ஜமீரிடம் கூறினார். அதோடு ராஜீவ்கிருஷ்ணன், ஜமீரை அழைத்துக்கொண்டு தான் பெரம்பலூரில் பணியாற்றி வரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தை வெளியில் இருந்து காண்பித்துள்ளார்.

இதை நம்பிய ஜமீர், தனக்கு சி.பி.ஐ.யில் வேலை வாங்கித்தரும்படி ராஜீவ்கிருஷ்ணனிடம் கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று ராஜீவ்கிருஷ்ணன் கூறியுள்ளார். அதன்படி ரூ.14 லட்சத்தை ராஜீவ்கிருஷ்ணனின் வங்கி கணக்கில் ஜமீர் டெபாசிட் செய்துள்ளார்.

இதேபோன்று சி.பி.ஐ.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ஜமீரின் நண்பர்களான கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த விமலிடம் இருந்து ரூ.6 லட்சத்தையும், மணிபாரதியிடம் இருந்து ரூ.13 லட்சத்தையும் ஆக மொத்தம் 3 பேரிடம் இருந்து ரூ.33 லட்சத்தை ராஜீவ்கிருஷ்ணன் தனது வங்கி கணக்கு மூலமாக பெற்றுக்கொண்டார். பணத்தை பெற்று 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் 3 பேருக்கும் சி.பி.ஐ.யில் வேலை வாங்கிக்கொடுக்காமல் ராஜீவ்கிருஷ்ணன் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து ஜமீர், விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் ராஜீவ்கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதோடு ராஜீவ்கிருஷ்ணனை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மூணாறில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் ராஜீவ்கிருஷ்ணன் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார், திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டுக்கு விரைந்து சென்று அந்த வழியாக வந்த ராஜீவ்கிருஷ்ணனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கடந்த 2003-ல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியில் சேர்ந்தும் பின்னர் 2007-ல் பெரம்பலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்ததும், அங்கிருந்து அயல் பணியாக தமிழக தலைமை செயலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் பணியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவர் பல நபர்களிடம் இருந்து இதுபோன்று வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், இந்த மோசடி தொகை மூலம் சென்னையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.


இதையடுத்து ராஜீவ்கிருஷ்ணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கார் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கள்ளக் குறிச்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ராஜீவ்கிருஷ்ணனின் வங்கி கணக்கு மற்றும் அவருடைய சொத்து ஆவணங்களை போலீசார் முடக்கி வைக்க முடிவு செய்துள்ளனர். அதோடு இந்த மோசடியில் ராஜீவ்கிருஷ்ணனுடன் வேறு யார், யார்? ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story