பெரம்பலூரில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு


பெரம்பலூரில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 15 Nov 2018 10:30 PM GMT (Updated: 15 Nov 2018 7:18 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அனில்மேஷ்ராம் நேற்று முன்தினம் பெரம்பலூர் வந்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அனில்மேஷ்ராம் நேற்று முன்தினம் பெரம்பலூர் வந்தார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் உள்ளிட்ட 4 ஒன்றியங்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனில்மேஷ்ராம் கலெக்டர் சாந்தா மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து செட்டிக்குளத்தில் வெங்காய வணிக வளாகத்தில் சின்ன வெங்காயத்தில் இருந்து வெங்காய ஊறுகாய், வெங்காய கூழ் மற்றும் உப்புக்கரைசலில் ஊரவைத்த வெங்காயம் உள்ளிட்ட மதிப்பு கூட்டுதல் பொருட்கள் தயாரிக்கும் செயல்முறைகள் மற்றும் சந்தைப்படுத்துவது குறித்து வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நேற்று பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் 44 எக்டேர் பரப்பில் அமைந்துள்ள சிட்கோ தொழிற் பேட்டை வளாகத்திற்கு சென்று வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வேப்பந்தட்டை தாலுகாவில் அமைந்துள்ள விஸ்வக்குடி நீர்த்தேக்கத்தை பார்வையிட்டார்.

Next Story