மணல் கொள்ளையர்களுக்கு அமைச்சர்கள் துணையாக உள்ளனர் நல்லக்கண்ணு பேட்டி


மணல் கொள்ளையர்களுக்கு அமைச்சர்கள் துணையாக உள்ளனர் நல்லக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளையர்களுக்கு அமைச்சர்கள் துணையாக உள்ளனர் என்று நல்லக்கண்ணு கூறினார்.

குளித்தலை,

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் மணத்தட்டை காவிரி ஆற்று பகுதியில் உள்ள மணல் குவாரி, தண்ணீர்பள்ளி பகுதியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை மூடக்கோரி கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் நல்லக்கண்ணு குளித்தலைக்கு வந்தார். அப்போது தண்ணீர்பள்ளி பகுதியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கு மற்றும் மணத்தட்டை காவிரி ஆற்று பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் எடுத்து செல்லும் பகுதியையும், மணல் அள்ளப்படும் இடத்தையும் இவர் பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குளித்தலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெற்ற காரணத்தால் குளித்தலை - முசிறி இடையே காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலம் சேதமடைந்துள்ளது. ஆற்றின் கரையில் இருந்த தென்னை, பனை ஆகிய மரங்கள் முழுமையாக பட்டுப்போய் அழிந்துவிட்டன. இதற்கு மணல் கொள்ளையே காரணம். இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் தந்தை பெரியார் பாலம் இடியக்கூடும்.

விதிகளுக்கு மாறாக மணத்தட்டை காவிரி ஆற்றில் அதிக அளவில் மணல் அள்ளப்படுகிறது. மணலை சேமித்துவைக்கும் சேமிப்பு கிடங்கை அகற்ற வேண்டும். தமிழக அரசு ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. மணல் கொள்ளை அடிப்பவர்களுக்கு அமைச்சர்களே துணையாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிபிரகாஷ் மற்றும் பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.

Next Story