‘கஜா’ புயல்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர் , சிதம்பரம் வெறிச்சோடியது


‘கஜா’ புயல்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர் , சிதம்பரம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 16 Nov 2018 4:00 AM IST (Updated: 16 Nov 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர், சிதம்பரம் வெறிச்சோடியது.

கடலூர், 

வங்க கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயலையொட்டி இரவு 8 மணிக்கு மேல் சாலைகளில் வாகனங்களை இயக்கக்கூடாது என்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். மேலும் புயலால் மாலை 4 மணிக்கு பிறகு பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்படி கடலூரில் நேற்று மாலை 6 மணிக்கே வாகனங்கள் இயக்குவது குறைக்கப்பட்டது. குறிப்பாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்கள் மாலை 6 மணிக்கு பிறகு பணிமனைகளில் நிறுத்தப்பட்டன.

இரவு 8 மணிக்கு பிறகு தொலைதூரங்களில் இருந்து வந்த பஸ்களை தவிர மற்ற பஸ்கள் பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன. இதற்கிடையில் புயலால் தனியார் நிறுவனங்கள் மாலை 4 மணிக்கு பிறகு தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது. இதனால் 4 மணிக்கே ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர்.

இது தவிர சொந்த வேலைக்காக கடலூர் வந்தவர்களும் தங்கள் வாகனங்களில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வெளியே நடமாட கூடாது என்று கலெக்டர் அறிவுறுத்தியதால் பொதுமக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்தது. இதனால் கடலூர் நகரம் வெறிச்சோடியது. கடலூர் பஸ் நிலையத்தில் இரவு 8 மணிக்கு ஒரு சில தனியார் பஸ்களை தவிர அரசு பஸ்கள் எதுவும் இல்லை. இதனால் பஸ் நிலையத்திலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. பஸ் நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

ஓட்டல்களும் அடைக்கப்பட்டதால் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் சாப்பாட்டுக்காக மிகவும் சிரமப்பட்டனர். கஜா புயலையொட்டி போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதேபோல் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியிலும் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் மற்றும் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ்நிலையம், நான்கு வீதிகள் உள்ளிட்ட முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

Next Story