இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்தது ஏன்? டி.டி.வி.தினகரன் பேச்சு


இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்தது ஏன்? டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2018 11:15 PM GMT (Updated: 15 Nov 2018 7:51 PM GMT)

இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி அ.ம.மு.க. சார்பில் அந்த தொகுதியின் வளர்ச்சி பணிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் முழுமையாக புறக்கணித்து வரும் தமிழக அரசை கண்டித்து நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. முடித்து வைத்து பேசினார். அப்போது கூறியதாவது:-

சசிகலாவால் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த 18 எம்.எல்.ஏ.க்களை இந்த ஆட்சியாளர்கள் தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

இப்போதைய ஆட்சியாளர்கள் தாங்களும், தங்களை சேர்ந்தவர்களும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை மறந்து முதல்-அமைச்சர் உள்ளிட்ட 33 அமைச்சர்களும் தங்களது தொகுதிகளில் மட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு 10 மாதத்துக்கு முன்பு ஒரு சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சனம் எழுப்பியதால் 10 மாதத்தில் சிலையை மாற்றி உள்ளனர். ஜெயலலிதா மீது பக்தியும், பாசமும், பணிவும், உண்மையாக இருந்து இருந்தால் முதலிலேயே அந்த சிலையை சரியாக வைத்திருப்பார்கள். எப்போது தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். துரோகிகளை வீழ்த்தி இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்போம்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு 2 ஆண்டுகள் கூட ஆகும். அதனால் தான் மக்கள் விரும்பாத இந்த துரோக ஆட்சி தொடரக்கூடாது என்ற நோக்கத்துடன் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்தோம். 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஆதலால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பாளர்கள் என்பதை மக்கள் தீர்ப்பின் மூலம் நாம் தீர்மானிப்போம். 8 வழி சாலை திட்டம் உள்ளிட்ட எந்த மக்கள் விரோத திட்டங்களையும் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த பழனியப்பன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் கிடப்பில் போட்டு உள்ளனர். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story