மதுரை மண்டலத்தில் விவசாயிகளுக்கு ரூ.36½ கோடி பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


மதுரை மண்டலத்தில் விவசாயிகளுக்கு ரூ.36½ கோடி பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 16 Nov 2018 4:15 AM IST (Updated: 16 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மண்டலத்தில் விவசாயிகளுக்கு ரூ.36½ கோடி பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை, 

65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மதுரை மடீட்சியா அரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்டுதோறும் கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா உலக நாடுகளின் கூட்டுறவு நிறுவனங்களிடையே தொடர்பு கொள்ள ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச கூட்டுறவு அமைப்பு 1895-ம் ஆண்டில் லண்டனில் நிறுவப்பட்டது. இதில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த தலைமை கூட்டுறவு சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கூட்டுறவு இயக்கத்துக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. மத்திய அரசின் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த பஞ்சாப்ராவ் தேஷ்முக், இந்த விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என விரும்பினார். அதன்படி, ஒரு வார காலம் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதியிலிருந்து 20-ந்தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக தமிழகம் முழுவதும் 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை 75 லட்சத்து 42 ஆயிரத்து 112 பேருக்கு ரூ.37 ஆயிரத்து 764 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் 10 லட்சத்து 45 ஆயிரத்து 389 பேருக்கு ரூ.687 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டு குறியீடு ரூ.160 கோடி ஆகும். அதன்படி 7.11.2018 வரை 8 ஆயிரத்து 288 பேருக்கு ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மண்டலத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.114 கோடியே 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 350 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ.36½ கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story