கிராமத்துக்குள் புகுந்து 2 கன்றுக்குட்டிகள்- நாயை கொன்ற புலி பொதுமக்கள் பீதி


கிராமத்துக்குள் புகுந்து 2 கன்றுக்குட்டிகள்- நாயை கொன்ற புலி பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து 2 கன்றுக்குட்டிகள் மற்றும் நாயை புலி அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கெம்பப்பா (வயது 59). விவசாயி. இவருடைய மனைவி ரத்தினம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் கெம்பப்பாவும், ரத்தினம்மாளும் தனியாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் 3 கன்றுக்குட்டிகள் மற்றும் 5 பசுமாடுகள் வளர்த்து வருகிறார்கள். மேலும் காவலுக்காக ஒரு நாயையும் வளர்த்து வருகின்றனர். கெம்பப்பா அந்தப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் மாடுகளை கட்டிவிட்டு, கெம்பப்பா தோட்டத்துக்கு காவலுக்கு சென்றுவிட்டார். ரத்தினம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாளவாடி வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று வெளியேறியது. இந்த புலி நெய்தாளபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் கெம்பப்பா வீட்டின் கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த 2 கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றது. மேலும் கொட்டகையில் காவலுக்கு நின்ற நாயையும் புலி கடித்துக்கொன்றுவிட்டது. இதையடுத்து அதில் ஒரு கன்றுக்குட்டியை மட்டும் இழுத்துச்சென்ற புலி அந்தப்பகுதியில் உள்ள கம்பிவேலியின் அருகில் போட்டு வயிறு பகுதியை மட்டும் கடித்து தின்றுவிட்டது.

நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து ரத்தினம்மாள் வெளியே வந்து பார்த்தார். அப்போது கொட்டகையின் முன்பு நாய் மற்றும் ஒரு கன்றுக்குட்டி கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. மற்றொரு கன்றுக்குட்டி அந்தப்பகுதியில் உள்ள கம்பிவேலி அருகே இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினம்மாள் இதுகுறித்து உடனடியாக செல்போன் மூலம் தன்னுடைய கணவர் கெம்பப்பாவுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே கெம்பப்பா அங்கு விரைந்து வந்தார். மேலும் இதுபற்றிய தகவல் அந்தப்பகுதியில் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி மக்களும் அங்கு திரண்டனர். இறந்து கிடந்த கன்றுக்குட்டிகளையும், நாயையும் அவர்கள் பார்வையிட்டனர்.

மேலும் இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கன்றுக்குட்டிகள் மற்றும் நாயை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது நாய் மற்றும் கன்றுக்குட்டிகளை புலி அடித்துக்கொன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று கெம்பப்பாவின் கன்றுக்குட்டிகள் மற்றும் நாயை கடித்துக்கொன்று உள்ளது. மேலும், அந்தப் புலி வனப்பகுதிக்கு சென்றுவிட்டதா? இல்லை கிராமத்தையொட்டி உள்ள பகுதிகளில் சுற்றித்திரிகிறதா? என்பது தெரியவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் பீதியில் உள்ளோம். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும், கன்றுக்குட்டிகளை பறிகொடுத்த கெம்பப்பாவுக்கு உரிய நஷ்டஈடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story