வாகன சோதனையில் பிடிபட்டது ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி சென்ற 170 கிலோ கஞ்சா பறிமுதல்


வாகன சோதனையில் பிடிபட்டது ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி சென்ற 170 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி சென்ற 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி,

ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி செல்வதாக போதைப்பொருள் நுண்ணறிவுபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் நேற்று காலை சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் கார் டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து காரில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்த போது அவர், ஆந்திரா மாநிலம் ஐதராபாத் ஹைடெக்சிட்டி பாலாஜிநகரை சேர்ந்த சத்தியநாராயணரெட்டி(வயது 28) என்பது தெரிய வந்தது. காருக்குள் சோதனையிட்டபோது, வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் கஞ்சா பதுக்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. மொத்தம் 6 மூட்டைகளில் 170 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

கஞ்சாவை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து விற்பனைக்காக மதுரைக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போதை பொருள் நுண்ணறிவுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்தியநாராயணரெட்டியை கைது செய்தனர். அந்த கஞ்சாவை யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு சென்றனர் என விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் இருந்து தப்பி ஓடிய டிரைவர் ஜெர்ரியை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story