மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் : பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அறிக்கை அரசிடம் தாக்கல்


மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் : பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அறிக்கை அரசிடம் தாக்கல்
x
தினத்தந்தி 16 Nov 2018 4:36 AM IST (Updated: 16 Nov 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

மும்பை,

மராத்தா சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் சமீப காலமாக தீவிரம் அடைந்தது. மராத்தா சமுதாயத்தினர் நடத்திய போராட்டங்களில் வன்முறைகள் வெடித்தன.

இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “மராத்தா சமுதாயத்தினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்த அறிக்கை கிடைத்தவுடன் சிறப்பு சட்டசபையை கூட்டி மராத்தா சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என கூறினார்.

இந்த நிலையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தனது அறிக்கையை மாநில அரசின் தலைமை செயலாளர் டி.கே. ஜெயினிடம் தாக்கல் செய்தது.

இதுகுறித்து டி.கே. ஜெயின் கூறுகையில், “மராத்தா சமுதாயத்தினரின் பொருளாதார மற்றும் சமூக நிலை குறித்த அறிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த அறிக்கையை முழுமையாக படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

மேலும் பா.ஜனதா மந்திரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது பல்வேறு சமூகத்தினருக்கு 52 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மராத்தா சமுதாயத்தினருக்கு நிச்சயமாக 16 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். நாங்கள் அதைவிட குறைவாக வழங்கமாட்டோம். இதன்மூலம் இடஒதுக்கீடு 68 சதவீதமாக உயரும்.

வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story