நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த ஆலோசிக்க வேண்டும் : கவர்னர் பேச்சு


நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த ஆலோசிக்க வேண்டும் : கவர்னர் பேச்சு
x
தினத்தந்தி 16 Nov 2018 5:25 AM IST (Updated: 16 Nov 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த ஆலோசிக்க வேண்டும் என்று விவசாய கண்காட்சியில் கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் விவசாயத்துறை, தோட்டக்கலை, பட்டு, வனம், கால்நடை, மீன்வளம் ஆகிய துறைகள் சார்பில் விவசாய கண்காட்சி தொடக்க விழா காந்தி விவசாய அறிவியல் மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாட்டிலேயே பெங்களூரு விவசாய பல்கலைக்கழகம் சிறப்பான இடத்தை பெற்று திகழ்கிறது. அங்கு பல்வேறு விதைகள் மற்றும் நாற்று வகைகளை கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவி செய்கிறார்கள். நல்ல பணிகளை செய்பவர்களுக்கு உதவி செய்வது நமது கடமை ஆகும்.

இந்தியா விவசாயி நாடு. இங்கு கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். அவர்களின் அடிப்படை தொழில் விவசாயம். அதனால் விவசாயத்துறைக்கு அரசுகள் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டியது அவசியம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விவசாய வளர்ச்சி ஆகிய இரண்டும் சம அளவில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடைய முடியும். ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மையமாக கர்நாடகம் திகழ்கிறது.

நவீன ஆராய்ச்சிகள் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். நீர் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். தேவையான அளவுக்கு மட்டுமே நீரை பயன்படுத்த வேண்டும்.

நம்மை போல் விலங்கு களுக்கும் நீரின் மீது உரிமை உள்ளது. விவசாயத்துறை மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாட வேண்டும். அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா பேசினார்.

விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி பேசுகையில், “பெங்களூரு பல்கலைக்கழகம், விவசாயத்துறைக்கு அதிக பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த கண்காட்சியில் 650 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய ஆராய்ச்சிகள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விஷயங்கள் இடம் பெற்றுள்ளன” என்றாா்.

விழாவில் விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

Next Story